- ஓம் சரவண பவ ! எனும் ஓம் கார மந்திரத்தோடே ஒவ்வொரு நாளையும் வணங்கி சிறப்பிக்கும் முருகப் பெறுமானின் அன்பு அடியார்களுக்கான இப்பதிவில், அவருக்கு உகந்த நாட்களையும், சஷ்டி விரத பூஜைகள் அவற்றின் முறைகளைப் பற்றிய குறிப்புகளையே இப்பதிவில் வாசிக்க உள்ளோம்.
- முருகருக்கு உகந்த நாளென்று ஒரு வருடத்தின் அனைத்து நாட்களையும் வணங்கி வருபவர்களாய் இருந்தாலும், அவரின் சிறப்பான சில நாட்களின் போது விரதம் இருந்து பூசை செய்து வந்தால் அவரின் அதீத அன்பிற்கும் ஆசிர்வாதத்திற்கும் உரியவர்கள் ஆவோம் என்பது ஆன்மீக பெரியோர்களின் போதனைகளில் ஒன்று.
- அவ்வாறு குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாட்களாக முருக பக்தர்கள் வாரத்தின் அனைத்து செவ்வாய் கிழமைகளையும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்றும், தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திர நாளன்றும், கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி திருதி மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்றும் முருக பக்தர்களால் விரதம் இருந்து சிறப்பு பூசை செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
செவ்வாய் கிழமை பூசை
- செவ்வாய் கிழமை முருகருக்கு உகந்த நாள் என்பதால் அன்று விரதம் இருந்து பூசை செய்வதால் வாழ்கையில் மேன்மேலும் வெற்றி பெற முடியும் என்பது ஆன்மீக வாதிகளின் கருத்து.
- அந்நாளன்று நாம் மேற்கொள்ளும் ஒரு பொழுது விரதம் ஆனது நமக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்து நம் தொழிலில் வெற்றி பெறச்செய்யும் என பெரியார்களால் நம்பப்படுகிறது.
- அதிலும் மார்கழி மாதம் செவ்வாய் கிழமை அதீத சிறப்பு வாய்ந்ததாக எண்ணப்படுகிறது. அதோடு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் விசாக நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய் கிழமை நாட்களும் சிறப்புடையது.
வணங்கும் முறை:
- இந்த நாளன்று முருகருக்கு நெய் தீபமிட்டு வழிபடுதல் நன்று.
ஆடிக் கிருத்திகை பூசை
- சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகளானது, சரவணப்பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக மாற, அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகைப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சூரபத்மனை அழிக்க அவதாரம் எடுத்து வந்த முருகரை வளர்த்த அந்த ஆறு கார்த்திகைப் பெண்களை போற்றி வணங்கும் பொருட்டு இந்த கிருத்திகை திருநாள் கொண்டாடப்பட்டு விரத நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
- இந்நாளன்று அனைத்து முருக பக்தர்களும் பிராத்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்துவதுடன் கோவில்களில் சிறப்புப் பூசைகள், அபிஷேக அர்ச்சனை வழிபாடுகள், வீதி உலா போன்ற சிறப்பு செய்கைகளிலும் முருகரை மகிழ்வித்து வணங்கி வருகின்றனர்.
- அதிலும் முருகருக்கான அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு பக்தர்கள் காவடி எடுத்தும் அழகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றுவர்.
வணங்கும் முறை:
- இந்நாளன்று முருகரை வணங்கி பகல் முழுவதும் உப்பில்லா உணவருந்தி மாலை அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று முருகரை வணங்கி விரதம் முடிப்பது சிறந்தது.
- அவ்வாறு செய்வதுடன் திருமணத்தடை உள்ளவர்கள் ஆடிக் கிருத்திகை நாளில் திருப் புகழ் பாடலை பாடி பாராயணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும் என ஆன்மீக பொரியோர்கள் கூறுகின்றனர்.
தைப் பூசம்:
- இந்த தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டுகின்றனர்.அதற்குக் காரணம் தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் தினம் சிறப்பு வாய்ந்த தினமாகும்.
- தை மாதத்தில் பூச நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து ஜோதி காண்பிக்கப்படும்.
- அதாவது சூரிய சந்திர ஜோதியுடன் ஜோதி என்றும் ,அதில்
சந்திரன் என்பதை மன அறிவு ,
சூரியன் என்பது ஜீவ அறிவு,
அக்னி என்பது ஆன்ம அறிவு எனவும்
சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி, அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைப்பூசம் என்றும் அதனை மனம் ஜீவனுள் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் என்னும் மறைப்பொருளோடு உணர்த்த கொண்டாடப்படும் விழாவாக நம் முன்னோர்களால் ஆன்மீக குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர் .
வணங்கும் முறை:
- இத்தகைய சிறப்பு மிக்க நாட்களுக்கு முருக பக்தர்கள் மாலை அணிந்தும், 21 அல்லது 48 நாட்களுக்கும் விரதம் இருந்து முருகரின் அருளைப் பெற முயல்வார்கள்
- தைப்பூச நாளன்று காலையில் எழுந்து நீராடிய பின்பு முருகரின் படத்திற்கு அல்லது விக்கிரகங்களுக்கு பழம், பூ, தேஙு்காய் படைத்து அவரின் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
- சிலர் அந்த நாள் முழுவதும் உபவாசம் மேற்கொள்வர். அல்லது பால் பழம் மட்டும் எடுத்து ஒரு வேலை பொழுது மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.
- முருகரின் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்.
- அவ்வாறு வணங்கி வந்தால் பகை அழியும், நவ கிரக தோஷம் நம்மை நெருங்காது, குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்று ஐதீகங்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
சஷ்டி விரதம்
- முருகருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சஷ்டிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது பழமொழி
- அதிலும் கார்திகை நாளன்று இருக்கும் விரதமானது ஒரு வருட காலம் விரதம் மேற்கொண்டதற்்கு சமம் என்பர்.
வணங்கும் முறை:
- சஷ்டி விரதத்தில் வளர்பிறை சஷ்டி எனவும் தேய்பிறை சஷ்டி எனவும் இருவேறாக வணங்குவர்.
- வளர்பிறை சஷ்டியில் ஆரோக்கியம் பெறுக, குழந்தை பாக்கியம் பெற, தொழில் வளர்ச்சி பெற வேண்டி விரதம் இருப்பர்.
- தேய்பிறை சஷ்டியில் கடன் தொல்லை குறைய, நோய் குணமாக விரதம் இருந்து வழிபடுவர்
- இந்த சஷ்டி விரதமானது தொடர்ந்து ஆறு நாட்கள் கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.
- ஒவ்வொரு நாளும் கடவுளை வணங்கி நீராடி முருகரின் மனமுருக கீர்தனைகள் பாடி வணங்க வேண்டும்
- பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து , தருப்பையை வைத்து சந்தனமும் அர்ச்சதையும் இட்டு முருகராக பாவித்து தீபம் காட்டி வழிபடலாம்.
- திருப்புகழ் பாராயணம் செய்வது முருகனின் அன்பிற்கு அருகில் இருப்பதைப் போன்று உணர்வைத் தரும்
- இந்த ஆறு நாட்களும் முருகருக்கு ஆறு கால பூசை செய்ய வேண்டும்.
- இவ்வாறு சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் நீங்கும், எண்ணிய நலமும் , புண்ணிய பலமும் கிட்டும் என்பார்கள்.
இத்தகைய சிறந்த நாட்களில் முருகரை வணங்கி அவரின் ஆசிர்வாதத்தை அனைவரும் பெறுவோம்…