இணையதளத்தில் வில்லங்கச் சான்றிதழ் சரி பார்ப்பது எப்படி? அதுவும் எந்த கட்டணமும் இல்லாமல்!…| Tricks Tamizha

இணையதளத்தில் வில்லங்கச் சான்றிதழ் சரி பார்ப்பது எப்படி? அதுவும் எந்த கட்டணமும் இல்லாமல்!…| Tricks Tamizha

பல கனவுகளுடன் ஒரு வீட்டை வாங்கும் பொழுது அனைவரின் எண்ணமும் அதில் எந்த வித சட்ட சிக்கல்களும் வராதபடி உள்ளதா? நம்பகமானதா? எதிர்காலத்தில் அந்த நிலத்தின் மேல் யாராவது உரிமை கோர வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விகள் தான். அதற்காக அரசாங்கத்தின் மேற்பார்வைக்குட்பட்ட சில சான்றுகளை சரிபார்க்க வேண்டும். அதில் சில,

  1. பட்டா
  2. சிட்டா
  3. அடங்கல்
  4. EC- வில்லங்கச் சான்று
  5. OC- ஆக்கிரமிப்புச் சான்று
  6. CC- நிறைவுச் சான்று

இது போன்ற சான்றிதழ்கள் எதிர் காலத்தில் நாம் வாங்கக்கூடிய நிலத்தின் மீதான நம் உரிமையை சட்டப் பூர்வமாக  உறுதிப்படுத்துவதுடன் எந்த வித நிதி இலப்பிற்கும் ஆட்படுத்தாமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

EC- Encumbrance Certificate (EC):

(வில்லங்கச் சான்றிதழ்)

  • ஒரு நிலம் , வீடு அல்லது நிலத்துடன் கூடிய வீடு போன்ற சொத்துக்களை வாங்கும் பொழுது அதன் உண்மையான உரிமையை சரிபார்க்க வேண்டும்.  இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவைத் தரக்கூடிய நம் நிலத்தின் ஒரு வரலாற்றுப் புத்தகம் தான் இந்த வில்லங்கச் சான்று. இதனை பயன்படுத்தி எதிர் காலத்தில் எந்த வித சட்ட சிக்கல்களும் நிதி சிக்கல்களும் வராதபடி காத்துக் கொள்ள முடியும்.
  • இந்த வில்லங்கச் சான்றிதழை தமிழ்நாட்டின் பதிவுத் துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த வகைச் சான்றிதழில் ஒரு சொத்தின் முந்தைய உரிமையாளர்கள் தகவல்கள் , இந்த சொத்தின் மீதான அடமானக் கடன்கள்,  உரிமைப் பகிர்வு, நில வரிகள் சரியாக செலுத்தப்பட்டுள்ளதா போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும்.
  • எதிர்காலத்தில் இந்த சொத்தினை விற்க விரும்பினாலோ அல்லது அடமானக் கடன் பெற விரும்பினாலோ இந்த சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது.
  • இந்த வில்லங்கச் சான்றிதழ் Online பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரை  இரு வேறு வகைகளில் வழங்கப்பட்டு வந்தது. அவை,
      1. படிவம் 15
      2. படிவம் 16
  • படிவம் 15 : சொத்தின் மீது வாங்கப்பட்ட கடன்கள், குத்தகைகள், அதில் இருக்கும் சட்ட சிக்கல்களின் போது அதை உறுதி செய்வதற்காக படிவம் 15 வழங்கப்படுகிறது.
  • படிவம் 16:  இந்த வகைப் படிவம் சொத்தின் மீது எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வழங்கப்படுவது ஆகும்.
  • அரசானது இத்தகைய இச்சான்றிதழைப் பெற தற்பொழுது எளிமையான வழிமுறைகளை இணையதளத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளது. அதனைப் பயன்படுத்தி ரூ. 100 மட்டுமே கட்டணமாக செலுத்தி  தேவையான ஆண்டுகளைக் குறிப்பிட்டு அதற்கான வில்லங்கச் சான்றிதழை சரிபார்கவும் அதனை நகல் எடுக்கவும் முடிகிறது.
  • 1975 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய ஆண்டு வரை வில்லங்கச் சான்றை இணையதளத்தின் மூலம் எடுக்க முடிகிறது.  அதற்கான வழிமுறைகளையே இப்பதிவில் வாசிக்க உள்ளோம்.

தேவையான விவரங்கள்:

  • பட்டாவில் குறிப்பிட்டிருக்கும் புல எண்
  •  உட் பிரிவு

வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:-

  • கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பயன்படுத்தி உள்நுழையவும். அதன் முகப்புப் பக்கத்தில் மின்னனு சேவைகள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதற்கு கீழே உள்ள வில்லங்கச் சான்று என்பதையும் அதைத் தொடர்ந்து வரும் தேர்வில் வில்லங்கச் சான்று விவரம் பார்வையிட என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில்  வில்லங்கச் சான்றிதழை தேடுவதற்காக நான்கு பிரிவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.  அவை,
      •  வில்லங்கச் சான்று
      • ஆவணம் வாரியாக
      • மனை/அடுக்குமாடி குடியிருப்பு எண்
      • வார்டு பிளாக் வாரியாக

இதில் குறிப்பிடும் தகவல்களில் எந்த தகவல்கள் கைவசம் உள்ளதோ அதனைப் பயன்படுத்தி தேடி எடுக்க முடியும்.

  • இதில் வில்லங்கச் சான்று என்பதைத் தேர்வு செய்யும் பட்சத்தில்  கீழே குறிப்பிடும் தகவல்களை உள்ளிட வேண்டும். அவை,
      1. சார் பதிவாளர் அலுவலமண்டலம்
      2. மாவட்டம்
      3. சார் பதிவாளர் அலுவலகம்
      4. ஆரம்ப நாள்
      5. முடிவு நாள்
      6. கிராமம்
      7. புல எண்
      8. உட்பிரிவு எண்

போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும். இவற்றில் ஆரம்ப மற்றும் முடிவு தேதி பற்றிய சந்தேகம் இருப்பின் அதே பக்கத்தின் கடைசியில் உள்ள தரவு கிடைக்கும் காலத்திற்கு என்பதை Click செய்து தெரிந்து கொள்ளவும்.

  • இதைத் தொடர்ந்து சேர்க்க  என்பதை தேர்வு செய்தால் குறிப்பிட்ட சர்வே எண்ணிற்கான தகவல் தோன்றும்.
  • அவ்வாறு இல்லாமல் ஆவணம் வாரியாக  என்ற தேர்வைப் பயன்படுத்தி உளநுழைந்து இருந்தால் அதில்,
      1. சார் பதிவாளர் அலுவலகம்
      2. ஆவண எண்
      3. ஆண்டு
      4. ஆவண வகைப்பாடு

போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.

  •  இந்த பயன்பாட்டின் மூன்றாவது தேர்வான மனை/ அடுக்கு மாடிக் குடியிருப்பு  என்பதைப் பயன்படுத்தி வாங்க இருக்கும் வில்லங்கச் சான்றிதழுக்கு உள்ளிட வேண்டிய தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அவை,
      1. மண்டலம்
      2. மாவட்டம்
      3. சார்பதிவாளர் அலுவலகம்
      4. ஆரம்ப நாள்
      5. முடிவு நாள்
      6. புல விரங்கள்: கிராமம், புல எண், உட் பிரிவு எண்
      7. மனை எண்
      8. அடுக்கு மாடி குடியிருப்பு எண்
  • நான்காவது தேர்வான  வார்டு எண் பிளாக்  வாரியாக தேட விரும்பினால் மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களுடன் கூடுதலாக
      1. கிராமம், புல எண், உட்பிரிவு
      2. நகர, வார்டு எண், பிளாக் எண் போன்ற கூடுதல் தகவல்களையும் உள்ளிட வேண்டும்.
  • பின் இசைக்குறியீட்டை சரியாக எழுதியதும் தேடுக என்பதை Click செய்ய வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து வரும் ஒப்புகைப்  பக்கத்தில் திருத்த இயலா நிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய  என்னும் செய்தி திரையில் தோன்றும். அதை தேர்வு செய்யவும்.
  • இப்பொழுது உள்ளிட்ட தகவல்களுடன் ஒத்த வில்லங்கச் சான்றிதழ் திரையில் தோன்றும்.
  • இதில் நாம் குறிப்பிட்ட ஆரம்ப தேதி முதல் முடிவு தேதி வரை பட்டாவில் நிகழ்ந்த அனைத்து மாறுதல்கள், விற்றவர், வாங்கியவர் விபரம், கடன்கள், தற்போதைய நிலை உட்பட அனைத்து தகவல்களையும் அடுத்தடுத்த பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும்.
  • இதை Download தேர்வைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  •  இவ்வாறு நமக்கு தேவையான வில்லங்கச் சான்றிதழை இணைய வழியில் எளிமையாக சரிபார்க்க முடியும்.
  • குறிப்பு:-  இந்த வில்லங்கச் சான்றானது ஒவ்வொரு ஊரிற்கும் மாறுபட்ட காலவரையறைக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
  • 1975 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்திற்கான வில்லங்கச் சான்றிதழ் தேவைப்பட்டால் அதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தை நேரில் அணுகி கையினால் எழுதப்பட்ட ஆவணமாக மட்டுமே பெற முடியும்.

வில்லங்கச் சான்றிதழின் மூலம் அறிந்து கொள்ளக் கூடிய தகவல்கள்:

  • சொத்தின் இருப்பிடம்
  • சர்வே எண்
  • சொத்து வகை
  • எல்லைகள்
  • பரப்பளவு
  • கடந்த கால பரிவர்த்தனைகள்
  • சொத்தின் மீதான கடன்கள் மற்றும் அடமானங்கள்
  • வில்லங்கச் சான்றிதழ் செல்லுபடியாகக் கூடிய கால வரம்புகள்
  • பதிவு செய்யும் அதிகாரியின் கையொப்பம்

போன்ற தகவல்களை உள்ளடக்கியதாக துணை சார் பதிவாளர் அலுவலகத்தால் பாதுகாக்கப்படும் ஆவணமே இந்த வில்லங்கச் சான்றிதழ்.

அதிகாரப்பூர்வ தரவுத் தளம்:

https://tnreginet.gov.in

இதே போன்று நமக்குத் தேவையான பட்டா, சிட்டா பதிவிறக்கம் போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு   https://trickstamizha.com  என்னும் இணைய தளத்தைப் பின்தொடரவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *